மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் வன்முறை - 9 பேர் பலி

0 2664

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வெடித்த வன்முறையில் 9 பேர் பலியாயினர்.

தேர்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூச்பெகார், வடக்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. கூச்பெகாரின் சித்தாய் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள், வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைத்தனர். தின்ஹாட்டா பகுதியில் இருந்த சாவடியில், வாக்குப் பெட்டிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வாக்குச்சாவடி முகவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளரின் கணவருக்கு தொடர்பிருப்பதாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பிர்காச்சா கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், டயர்கள் உள்ளிட்டவை தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதனிடையே, வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேரும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சைகளில் தலா ஒருவரும் என மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறைக்கு திரிணாமூல் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments