293 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 3 பேர் கைது
ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கையில், சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட மனித பிழை இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துக்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டிருந்தது.
விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரும் தவறுக்கு காரணமாகக் கூறி மூத்த செக்சன் என்ஜினீயர் அருண் குமார் மொகந்தா, செக்சன் என்ஜினீயர் முகமது அமீர்கான் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பப்பு குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது கொலைக்குச் சமமான குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றத்திற்கான ஆதாரங்களை காணாமல் செய்வது மற்றும் குற்றவாளிக்கு தவறான தகவல்களைத் தருவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments