மாதம் ரூ. 1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? யார் யாருக்குக் கிடைக்காது..?

0 4554

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் உதவித் தொகையை யார் பெற முடியும், யாரெல்லாம் பெற முடியாது என்ற வழிகாட்டுதல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் கூடிய மாவட்ட ஆட்சியர்கள், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அவர்களிடையே தமது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் பேசிய முதலமைச்சர், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று பெயர் சூட்டப்படுவதாகவும், செப்டம்பர் 15-ஆம் தேதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருக்க வேண்டும், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலமோ வைத்திருக்க வேண்டும், அல்லது, ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்ற 3 பொருளாதார அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒரு குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர் அனைவரும் ஒரே குடும்பமாகக் கருதப்படுவர் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று, யார் உதவித் தொகை பெற முடியாது என்ற அளவுகோலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டுவோர் மற்றும் வருமான வரி செலுத்துபவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன, வங்கிகளின் ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது. 

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்காது. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அதிகாரிகள் கூறினர். 

இந்த திட்டதிற்கு ரேஷன் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments