போலீஸ் எனக்கூறி டீக்கடைக்காரரை மிரட்டி காசோலை மூலமாக 3 லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது...!
நாமக்கல்லில் போலீஸ் எனக்கூறி டீக்கடைக்காரரை மிரட்டி காசோலை மூலமாக 3 லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொய்யேரிக் கரையில் டீக்கடை நடத்தி வருபவர் செல்லத்துரை. அவரது கடைக்கு கடந்த மாதம் 26ம் தேதி வந்த 3 பேர் தாங்கள் சென்னை போலீஸ் எனவும், ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டுமென கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சோதனையிடுவதாகக் கூறி பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டதோடு, வங்கி இருப்பில் இருந்த 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு 3 காசோலைகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதுகுறித்து செல்லத்துரை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு வந்த குறுந்தகவலை அவரது மகள் பார்த்த பின்னரே செல்லத்துரை ஏமாற்றப்பட்ட விபரம் தெரிய வந்தது.
இதுகுறித்து, புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நாமக்கல் போலீஸார், காசோலையை மாற்றுவதற்காக வங்கிக்கு வந்திருந்த திருச்செங்கோட்டை சேர்ந்த மாதேஸ்வரனையும், அவனது கூட்டாளிகளான சபரிநாதன், இலியாஸ் ஆகியோரையும் கைது செய்தனர்.
Comments