இளசுகளின் டிரிபிள்ஸ் ரைடு... போலீஸில் போட்டுக் கொடுத்தவரை அடித்து உதைத்த இளம்பெண்கள்.. அபராதம் விதித்து கடமையை செய்த போலீஸார்..!

0 1965

ஒரே டூவீலரில் பயணித்த 3 இளம்பெண்களை புகைப்படம் எடுத்து சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவிட்டதற்காக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரது பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்...

சென்னை அடையாறு எம்ஜிஆர்.ஜானகி கல்லூரி எதிரே பேருந்து நிலையத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் போக்குவரத்து காவல்துறையினர். அவ்வழியாக ஒரே டூவீலரில் வந்து கொண்டிருந்த மூன்று இளம் பெண்களை மடக்கி பிடித்தார் போக்குவரத்து பிரிவு காவலர் ராஜேஷ். 3 பேரில் ஒருவரைக் காட்டி அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அங்கிருந்து வேக வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தில் அவர்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்குள்ள கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த அருண்குமார் விக்ரம் என்பவர் மூன்று பெண்களையும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் புகைப்படம் எடுத்து பெருநகர சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.

தங்களை இளைஞர் புகைப்படம் எடுப்பதை கண்டுவிட்ட முகமூடி பெண்களில் இருவர், அவரை தாக்கி, அவதூறாக பேசி பலரது முன்னிலையில், பட்டபகலில் செருப்பை கழட்டி அடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த காவலர் ராஜேஷ், இருபெண்களையும் சமாதானம் செய்தார்.

அந்த மூன்று பெண்களும் ஒரே வாகனத்தில் பயணிக்க முயன்ற போது காவலர் ராஜேஷ் மூவரையும் எச்சரித்து வாகனத்தை தள்ளிச் செல்லும் படி அறிவுறுத்தினார். இதனால் வண்டியே வேண்டாம்.. என்று இரு பெண்கள் நடந்து செல்ல... அதில் ஒரு பெண்ணை அவரது ஆண் நண்பர் அழைத்துச் சென்றார்.

தன்னை தாக்கிய பெண்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அருண்குமார் விக்ரம் புகார் அளித்தார். அதில் தன்னை தாக்கிய பெண் ,தான் போலீஸ்காரரின் மகள் என்றும் தன்னை புகைப்படம் எடுத்து ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டி சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அருண்குமார் விக்ரமின் பதிவின் பேரில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆயிரம் ரூபாயும், விதிகளை மீறி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்ததற்காக ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் சென்னை பெருநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானதாக அருண்குமார் விக்ரம் கொடுத்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments