ஆராரோ.. ஆரிரரோ...! அமைச்சர் பேசறாரோ... அதிகாரிகள் தூங்குறாரோ..! அவ்வளவு பணிச்சுமையாம் மக்களே..!
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது , எம்.எல்.ஏ, காவல் கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆய்வுக்கூட்டம் ஒன்றில் அமைச்சரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அயர்ந்து தூங்கி வலிந்த காட்சிகள் தான் இவை..!
திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தங்கள் பகுதியில் பெரும்பாலான சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மக்கள், போக்குவரத்து நெரிசல்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ வேலு , தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றால் ஏற்ப்படும் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளைக் கொண்டு சரி செய்து வருவதாக தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது அதிகாரிகள் சிலர், அமைச்சரின் உரையை, தாலாட்டு என்று நினைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் தான் இப்படி என்றால் அதற்கும் ஒரு படி மேலாக மேடையிலே அமைச்சர்களோடு அமர்ந்திருந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனும் மாயக்கண்ணன் போல மேடையிலேயே தூங்கி வழிந்தனர்.
விபத்துக்களை தடுப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் அயர்ந்து தூங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments