அந்த 3 நாட்கள் பெண்கள் வீட்டுக்குள் இருந்தாலே தீட்டாம்.. வீதியில் சாப்பாடு... தங்குவதற்கு தனி இடம்..!
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகப்பட்டி கிராமத்தில் மாதவிடாய் வந்த பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீதியில் வைத்து உணவு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
மாதவிடாய் பிரச்சனை பற்றி பேச மறந்துவிட்டதன் விளைவு, அதனை தீட்டு என்று கூறி வீட்டில் இருந்து வெளியேற்றி வீதியில் அமரவைத்து உணவளிக்கப்படும் காட்சிகள் தான் இவை..!
அந்தப்பெண் வீதியில் அமரவைக்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியவில்லை... அசைவ உணவு வழங்கப்படுவதை மட்டும் சக பெண் பெருமையாக கூறுவது, வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம்..! என்று இந்த வீடியோவை பதிவு செய்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் பெண்ணிய சிந்தனையாளர்கள்.
கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு மதவிடாய் பெண்களை ஒதுக்கி வைப்பதற்கு என்று பல்னோக்கு கட்டிடம் என்ற பெயரில் தமிழக அரசின் நிதியில் தனிக் கட்டிடமே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி தான், அதனை திறந்து வைத்ததாகவும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர்.
போதகப்பட்டியில் வசித்து வரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 55 குடும்பத்தினர் தங்கள் வீட்டுப்பெண்களை அந்த 3 நாட்களும் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டை தாங்கள் கோவிலாக கருதுவதாலும், மாதம் முழுவதும் வேலையில் மூழ்கி கிடக்கும் பெண்களுக்கு 3 நாட்கள் ஓய்வு அளிப்பதற்காகவுமே மாதவிடாய் வந்த பெண்களை அந்த தனி கட்டிடத்தில் தங்க வைத்து உணவளிப்பதாகவும், அவர்களை ஊரைவிட்டு தள்ளிவைக்கவோ, ஒதுக்கவோ இல்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த சக்திவேல்.
இதே நடைமுறை போதகாப்பட்டி மட்டுமில்லாமல் போடிநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, ராமநாயக்கன்பட்டி, உள்ளிட்டகிராமங்களிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments