மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் செந்தில் பாலாஜி ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு - சொலிசிட்டர் ஜெனரல்
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மாதக்கணக்கில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால் அதனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்.
செந்தில் பாலாஜி மிகவும் செல்வாக்கு படைத்தவர் என்பதால் ஒவ்வொரு நாளும் வழக்கின் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி விசாரிக்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு விசாரிக்க முடியும் என கேள்வியெழுப்பினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியை ஒரு வாரத்திற்குள் நியமிக்கவும் வழக்கை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Comments