மது போதையில் வாகனம் ஓட்டிச் சென்று போலீசில் சிக்கிய நபர்.. போதை நண்பனை மீட்க போதையில் வந்த வழக்கறிஞர்கள்..
சென்னையில் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று போலீசிடம் சிக்கிய நண்பனை காப்பாற்றுவதற்காக வழக்கறிஞர்கள் இரண்டு பேர் போதையில் சென்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரை ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.
வியாசர்பாடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக தாறுமாறாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மடக்கினர். அதில் வந்த பிரகாஷ் தினகரன் என்ற நபர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. பிரீத் அனலைசரில் 190 புள்ளிகள் காண்பித்த நிலையில், அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
அதற்குள் பிரகாஷ் தனது நண்பர்களுக்கு போன் செய்ததை அடுத்து, வழக்கறிஞர்களான மணிக்குமார், லோகேஸ்வரன் மற்றொரு நபர் என 3 பேர் மற்றொரு பைக்கில் டிரிப்ள்ஸ் வந்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே போலீசாரை வழிமறித்த அவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சட்டையைக் கழற்றிவிட்டு நாக்கைத் துருத்திக் கொண்டு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதாக புகார் எழுந்தது.
போதை கும்பலின் அட்டகாசத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கவே, கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இதனையடுத்து பிரகாஷ் தினகரனின் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Comments