காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக கர்நாடகா அரசு அறிவிப்பு... முதலமைச்சருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை

0 1924
காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக கர்நாடகா அரசு அறிவிப்பு... முதலமைச்சருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை

கர்நாடகாவில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக கர்நாடகா அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு எழுதியிருந்த கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேகதாது பிரச்னை மீண்டும் இரு மாநிலங்களுக்கு இடையே பேசு பொருளாகி உள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதல்வருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக, தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் உடனடியாக டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசியல்வாதிகள் கூறிவந்தாலும் அதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று துரைமுருகன் குறிப்பிட்டார். மேலும் முதலமைச்சருடன் ஆலோசனைக்குப் பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments