சிகிச்சையின் போதே.. ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியது ஏன்..?
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. மருத்துவப் பணியாளர்களின் அலட்சியமே குழந்தையின் கை இழப்பிற்கு காரணமென பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர்- அஜிஸா தம்பதியருக்கு ஒன்றரை வயதில் முகமது மாகீர் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தையின் தலையில் நீர் கோர்த்திருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைக்கு கடந்தாண்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால் சென்னையிலேயே தங்கினர் தம்பதியர். இந்நிலையில், தலையில் கோர்த்திருந்த நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்காக குழந்தையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த டியூப், ஆசன வாய் வெளியே வந்ததால் சிகிச்சைக்காக வியாழக்கிழமையன்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் குழந்தை முகமது மாகீர். உடனடியாக, குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அதே டியூப் பொருத்தப்பட்டது. குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் செலுத்துவதற்கான ஊசியை சொருகி அதன் வழியாக மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறு சொருகப்பட்ட டிரிப்ஸ் ஊசியை சரியான முறையில் செலுத்தாததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கை அழுகியதாக குற்றஞ்சாட்டிய பெற்றோர், இதுகுறித்து, பணியிலிருந்த செவிலியரிடம் தெரிவித்த போது அவர்கள் அலட்சிமாக நடந்து கொண்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்த விவகாரம் காலை காலை பணிக்கு வந்த மருத்துவருக்கு தெரிய வரவே, குழந்தையின் கையை ஸ்கேன் செய்த போது கை அழுகியது தெரிய வந்தது. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையின் தலைக்கு மட்டுமே சிகிச்சை வழங்க முடியும் என்பதால், உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் சனிக்கிழமை பரிந்துரைத்தனர். இதையடுத்து ஞாயிறு மாலை அங்கு சுமார் 2 மணி நேரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த ராஜிவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், குறைமாத பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு ரத்த ஓட்ட பாதிப்பு, இதயத்தில் ஓட்டை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததாக கூறினார். இந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர் திறன் குறைபாடு இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுள்ளது. அதனை சரிசெய்ய சீரிய முயற்சிகள் எடுத்த போதும் வலது கை முழுவதும் ரத்த உறைவு ஏற்பட்டதால் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம், குறித்து விசாரணை நடத்த மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தனது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்றும், எனவே தாய்மை உணர்வோடு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தையின் தாய் அஜிஸா கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை இன்று தொடங்குகிறது. மூன்று துறைகளை சார்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு, இரண்டு தினங்களில் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments