100 அடி கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை காப்பாற்ற குதித்த 3 பேர் பலியானது ஏன்..? திகில் சம்பவத்தின் பின்னணி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மொபட்டில் அதிவேகமாக சென்ற 3 மாணவர்கள் 100 அடி ஆழ விவசாய கிணற்றில் மொபட்டுடன் தவறி விழுந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓட்டிச்சென்ற மொபட்டால் 3 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதரமாக இருந்த குடும்ப தலைவர்களை இழந்து கதறி அழும் கண்ணீர் காட்சிகள் தான் இவை..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கணவாய்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் அபினேஷ் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை தந்தையின் மொபட் வாகனத்தை எடுத்துக் கொண்டு விளையாடச் சென்ற அபினேஷ் தனது கூட்டாளிகளான, நித்தீஷ்குமார், விக்னேஷ் ஆகியோருடன் வீட்டிற்கு திரும்பி உள்ளான். அதிவேகத்தில் வந்த போது சாலை வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்துள்ளான். பிரேக் செயலிந்ததால் கட்டுப்பாட்டை இழந்து மொபட்டுடன் அங்குள்ள 100 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் 3 பேரும் தவறி விழுந்தனர்.
இதனை அந்த வழியாக இரு சக்கரவாகனத்தில் வந்த சரவணன் என்பவர் பார்த்து , 3 சிறுவர்களையும் காப்பாற்ற வேண்டுமே என்று சத்தமிட்டுக் கொண்டே கிணற்றுக்குள் குதித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தில் நின்ற அபினேஷின் தந்தை குப்புசாமி ஓடி வந்து குதித்துள்ளார். அவரை தொடர்ந்து அசோக்குமார் என்பவர் ஓடிவந்து குதித்ததாக கூறப்படுகின்றது. குதித்த வேகத்தில் இரு சிறுவர்களை மீட்டு, தூக்கி மோட்டார் குழாயை பிடித்துக் கொள்ள செய்த நிலையில் , சிறுவன் விக்னேஷை மீட்க முயன்றனர்.
அதற்குள்ளாக இங்கு திரண்ட ஊர் மக்கள் கட்டில் ஒன்றை கயிறுகட்டி உள்ளே இறக்கி அபினேஷ், நித்தீஷ்குமார் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து மேலே கொண்டு வந்தனர். இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபினேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே விக்னேஷை காப்பாற்ற கிணற்றில் குதித்த 3 பேரும் ஒருவர் பின்னர் ஒருவராக மயக்கமடைந்து நீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகின்றது. இதனால் பயந்து போன மக்கள் உள்ளே இறங்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, கயிறு கட்டி உள்ளே இறங்கினர். சிறுவன் விக்னேஷ் மற்றும் காப்பாற்ற சென்று பலியான சரவணன், குப்புசாமி, அசோக் குமார் ஆகியோரது சடலங்களை கிரேன் மூலம் கயிறு கட்டி மேலே தூக்கி கொண்டுவந்தனர்
உயிரை காப்பாற்ற போன இடத்தில், உயிரை இழந்தவர்களின் உறவினர்கள் ஆற்றொணா துயரால் கதறி அழுதனர்.
அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜேஷ்குமார் எம்.பி , மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் சிகிச்சை பெற்றுவரும் மாணவனை சந்தித்ததோடு, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த 4 பேரது குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாயை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எந்த ஒரு தடுப்புச்சுவரும், பாதுகப்பு கம்பிகளும் இல்லாத சாலையோர பாதாள கிணற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உமா, கிணற்றில் விழுந்தவர்களின் உயிர்பலி எப்படி நடந்தது? என்று விவரித்தார்
இந்த கோர சம்பவத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாணவர் நித்தீஷ்குமார் மொபட்டின் பிரேக் செயல் இழந்ததாக கூறினார்.
மொபட்டில் இருந்து வெளியான பெட்ரோல் , கியாஸ் போல பரவியதால் மீட்க சென்ற 3 பேரும் மயக்கம் ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி பலியானதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
Comments