நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்

0 2486

சாத்தான்குளம் பகுதியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத்திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுதாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

கால்வாய் எங்கு வருகின்றது என்பதே தெரியாமல் , பெண் விவசாயியின் தோட்டத்தை கையகப்படுத்த நினைத்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் வறுத்தெடுத்த காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலஎடுப்புப் பணி நடந்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக 67 கிலோ மீட்டர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 8 கிலோ மீட்டர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கால்வாய் அமைய இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது 3,500 கனஅடி தண்ணீர் அங்கிருந்து திருப்பப்பட்டு, கருமேனியாறு- நம்பியாற்றினை இணைத்து, கடைசியாக இருக்கின்ற கிராமங்களுக்கு 500 கனஅடி தண்ணீர் வரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 8 கிலோ மீட்டர் கால்வாய்ப் பணிகளுக்கு 6.7 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் எடுக்கப்பட்டு அதில் 50 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நிலஎடுப்புப் பணி 11 பட்டாதாரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் நடைபெறாமல் உள்ளது.

இந்தநிலையில் அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தேரிகாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விவசாயிகளிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். 'ஊருக்குள் காலி நிலம் நிறைய இருக்கு அதை விட்டு கால்வாயை தனது தோட்டம் வழியாகச் செல்வது போல அதிகாரிகள் அமைக்க இருப்பதால் தன் நிலத்தை கொடுக்க மறுப்பதாக' பெண் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து கால்வாய் செல்லும் வரைபடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியிலும், விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலும் கால்வாய் அமைக்காமல் இருப்பதாக சுட்டிக்கட்டினர்

ஆனால் அதிகாரிகளுக்கு அந்த கால்வாய் எந்தவழியாக செல்கிறது என்று உறுதியாக சொல்லத் தெரியவில்லை, கால்வாய் செல்லும் பாதையை அளந்து குறியீடு வைக்கப்பட்டுள்ளதா ? என்று கேட்டபோது அதிகாரிகளிடம் பதில் இல்லை

அதை செய்திருக்க வேண்டிய சர்வேயர் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டு நின்றார் . அவரை அழைத்து கண்டித்த கலெக்டர் செந்தில்ராஜ், டேப்பை பிடித்து அளந்து மார்க் செய்ய உத்தரவிட்டதால் மெத்தன அதிகாரிகள் விழிபிதுங்கினர்

இறுதியாக தன்னிடம் கோரிக்கையை வைத்த பெண் விவசாயியிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் சிரியுங்கள் என்று கூறிச்சென்றார் கலெக்டர்.

பட்டாதாரர்களிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்து நிலநிர்வாகஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments