தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்கிறார்..!!
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவின் 31வது டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதை அடுத்து புதிய டி.ஜி.பி.யை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2019-ஆம் ஆண்டில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட அவர், 2021-ஆம் ஆண்டில் சென்னை காவல் ஆணையராக பணியமர்த்தப்பட்டார்.
டி.ஜி.பி. அந்தஸ்து பெற்ற பின்னரும் 2 ஆண்டுகள் காவல் ஆணையராக பணிபுரிந்த சங்கர் ஜிவால், மெச்ச தகுந்த பணிக்காக இருமுறை குடியரசு தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.
இதேபோன்று, சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரும் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
ஆவடி ஆணையரகத்தின் காவல் ஆணையராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்த அவர், அண்மையில் டி.ஜி.பி. அந்தஸ்து பெற்று காவல் பயிற்சி அகாடமி இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார்.
Comments