பறந்து பறந்து கண்காணிக்கும் ஆளில்லா விமானம்.... ஆபத்தில் உதவும் ட்ரோன்கள்.... பவர் ஃபுல்லாகும் சென்னை காவல்துறை....!
ஆளில்லா குட்டி விமானம், ஆபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் ட்ரோன், மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களில் சுற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்ட புதிய ட்ரோன் பிரிவு இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை காவல் துறையில் துவங்கப்பட்டுள்ளது.
இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் போலீஸ் யூனிட்டை தொடங்கி உள்ளது சென்னை காவல்துறை.
சென்னை அடையாறில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய ட்ரோன் காவல் மையத்தை திறந்து வைத்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என்ற கனவினை இந்த ட்ரோன் யூனிட் நனவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் ஆளில்லா விமானம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப கேமராக்களை மாற்றிப் பொருத்திக் கொள்ளும் வசதி கொண்ட இந்த விமானம், வான் மற்றும் சாலை மார்க்கமாக தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பின்தொடர்ந்துச் சென்று நேரடி காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் கடல் அலையில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உயிர் காக்கும் கவசத்தை கொண்டுச் சென்று வழங்கும் வகையில் மற்றொரு ட்ரோன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
நெரிசலை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலும் ஒரு ட்ரோன் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் போலீஸார்.
இந்த ட்ரோன்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், பழைய குற்றவாளிகளின் புகைபடங்கள் பதிவேற்றப்பட்டு அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
இந்த மூன்று வகையிலும் உள்ள 9 யூனிட்டுகளை இயக்க பொறியியல் பட்டதாரி காவலர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அடையாறில் உள்ள ட்ரோன் காவல் மையத்தில் இருந்தபடி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ட்ரோன்கள் ரோந்து செல்லும் எனவும் போலீஸார் கூறினர்.
இரவு மற்றும் மாலை நேரத்தில் ரோந்துச் செல்வதற்கு இந்த ட்ரோன் யூனிட் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென தெரிவித்தார் காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.
நவீன தொழில்நுட்பங்களால் சென்னை காவல்துறை மேலும் பலம்பெற்றிருப்பது, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் என்றும் போலீஸார் குறிப்பிட்டனர்.
Comments