அம்புட்டு திருட்டு பயலுகளும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸில்.. சிசிடிவி காமிராவால் சிக்கினர்..! பெண் வாடிக்கையாளர் பாதுகாப்பு ?
திருக்கோவிலூர் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் காமிரா வைத்ததாக கடை ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடைக்கு வந்த பெண்ணை குற்றவாளியாக்க முயன்ற சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
ஜோடி போட்டு காரில் ஏறிச்செல்லும் இந்த பாசமலர் அண்ணன் - தங்கை தான் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் ஜவுளிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் காமிரா வைத்ததாக போலீசில் சிக்கியவர்கள்..!
திருக்கோவிலூர் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ஏசி கிரிலுக்குள் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் பெண் வாடிக்கையாளர் மற்றும் கடை ஊழியர்களிடம் டி.எஸ்.பி மனோஜ்குமார் நேரடியாக விசாரித்து வந்தார். பெண் வாடிக்கையாளரை சிக்க வைப்பதில் அந்த கடையின் மேலாளர் ஏழுமலையும், பெண் ஊழியர் உதயாவும் தீவிரமாக இருந்ததால் இருவர் மீதும் சந்தேகம் வலுத்தது.
ஏழுமலையை தங்கள் பாணியில் விசாரித்து அன்று கடையில் பதிவான முழுமையான சிசிடிவி காட்சிகளை பெற்ற போலீசார் , அதில் மாலை 4 மணி அளவில் ஆண் ஊழியர் ஒருவர் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். அவர் யார் என்பதை கண்டறிய வேலை பார்க்கும் ஊழியர்களின் பெயர விவரங்களை கேட்டனர்.
அப்போது ஒருவர் பெயரை தவிர மற்ற அனைவரின் பெயர் விவரங்களும் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. விடுபட்ட விக்னேஷ் என்ற அந்த நபரை பிடித்து விசாரித்த போது , அங்கு தூய்மைப்பணியாளராக வேலைப்பார்த்து வரும் அவர் தான், சம்பவத்தன்று பெண்கள் உடைமாற்றும் அறையை சுத்தம் செய்ய சென்ற போது செல்போனை மறைத்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தன்று கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் உடை மாற்றும் அறையில் காமிரா இருப்பதாக கூச்சலிட்டு ஓடிவந்ததும், அதனை பெண் ஊழியர் உதயா என்பவர் எடுக்கும் போது அது தவறி கீழே விழுந்து சிதறியுள்ளது.
அந்த செல்போன் தனது சகோதரன் விக்னேசுடையது என்று தெரிந்ததும், சிதறிய மெமரிகார்டை எடுத்து உதயா , தனது ஆடைக்குள் மறைத்து வைத்து வெளியே எடுத்துச்சென்று திருக்கோவிலூர் தரைப்பாலம் அருகே உடைத்துப்போட்டதும் தெரியவந்தது. போலீசாரை குழப்புவதற்காக சம்பவத்தன்று செல்போனை வாங்கிப்பார்த்த பெண் வாடிக்கையாளர் மீது உதயா பழிபோட்டதாக கூறப்படுகின்றது.
உதயாவுக்கும், மேலாளர் ஏழுமலைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் அவரும் சிசிடிவி காட்சிகளை கொடுக்க மறுத்ததோடு, விக்னேஷ் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸில் வேலை பார்ப்பதையே மறைத்ததாக தெரிவித்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். உதயவையும் , விக்னேஷையும் அழைத்துச்சென்று தரைப்பாலம் பகுதியில் 6 துண்டுகளாக உடைத்து போடப்பட்ட மெமெரிகார்டை கைப்பற்றினர்.
அம்புட்டு திருட்டு வேலைகளையும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் ஊழியர்களான இவர்கள் 3 பேரும் செய்து விட்டு கடைக்கு துணி வாங்க வந்த பாவத்துக்கு பெண் வாடிக்கையாளரை போலீசில் மாட்டிவிட முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களில் ஏழுமலை காவல் நிலைய ஜாமீனில் விடப்பட்ட நிலையில், உதயாவின் எதிர்காலம் கருதி நீதிபதி ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகின்றது. இவர்களில் விக்னேஷ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஜவுளிக்கடையில் உடைமாற்றும் அறைக்கு செல்லும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Comments