லாரியின் பாரம் தாங்காமல் உடைந்து நொறுங்கிய புதிய மழை நீர் வடிகால்..! சக்தி கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் அதிர்ச்சி
சென்னை மணலி புது நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால், லாரியின் எடையை தாங்க இயலாமல் உடைந்து சிதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலி புது நகரில் பல கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை இரு தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒருவரான சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஆர்.எல் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது. பணிகள் முழுவதுமாக முடிந்து சில மாதங்களேயான நிலையில் சாலைப் பணிகளுக்கான மூலப்பொருட்களுடன் சென்ற லாரியின் பாரம் தாங்காமல் மழை நீர் வடிகால் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது
லாரியின் பாரத்தை கூட தாங்காத அளவிற்கு சாலையை கடக்கும் பகுதியில் தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், பெரிய அளவிலான லாரி என்பதால் பாரம் தாங்காமல் மழை நீர் கால்வாய் உடைந்ததாக 16 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இன்னும் முதல் மழையை கூட முழுமையாக எதிர்கொள்ளாத இந்த மழை நீர் வடிகால் அமைப்பு உடைந்து இருப்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ் மேற்பார்வையாளர் ராமு, எம் 20 என்ற காங்கிரீட் கலவை கொண்டு மழை நீர் கால்வாய் அமைத்ததாகவும், கால்வாய் உடைந்த தகவல் அறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments