ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் உடைமாற்றும் அறையில் செல்போன் காமிரா எப்படி..? போலீஸ் வெளியிட்ட தகவல்..!

0 5107

திருக்கோவிலூரில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் காமிரா செல்போனை மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்கு மும்பை அலுவலகத்தின் அனுமதிக்காக போலீசார் காத்திருக்கின்றனர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மேல வீதியில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடைக்குப் போன இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய ஆடை சரியாக உள்ளதா? என அணிந்துப் பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது உடைமாற்றும் அறையில் ஏசி வரும் பாயிண்டில் காமிரா செல்போன் ஒன்று இருந்ததாக தெரிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இருவரும் அருகில் இருந்த பெண் ஊழியரிடம் விவரத்தை கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறைக்கு சென்று அங்கு மேல் பகுதியில் ஏசி பாயிண்டில் இருந்த செல்போனை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் வாடிக்கையாளர், உடனடியாக உடைமாற்றும் அறைக்கு வந்து அந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டு மீண்டும் கடைக்குள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்த பெண்ணை கடையின் ஊழியர்கள் பிடித்து உடனடியாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீசார் , செல்போனை பறித்துச் சென்ற பெண் வாடிக்கையாளரை அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று பெண் காவலர்கள் மூலமாக 25ஆம் தேதி இரவு விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இரண்டாவது நாளாக மீண்டும் அந்தப் பெண் வாடிக்கையாளர் மற்றும் கடை ஊழியர்களையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடையின் ஊழியர்கள் தெரிவித்தது போல் அந்த பெண் வாடிக்கையாளர், கடந்த 24 ஆம் தேதி இரவு அதே கடைக்கு துணி வாங்க வந்த போது, குறிப்பிட்ட அந்த உடை மாற்றும் அறையை பயன்படுத்தியதாகவும் , ஒரு வேளை தான் உடைமாற்றும் காட்சி அந்த செல்போனில் பதிவாகி இருக்க கூடுமோ என்ற அச்சத்தில் வாங்கிச்சென்று பார்த்ததும் தெரியவந்தது.

கடையின் ஊழியர்களோ முதலில் செல்போனில் மெமரி கார்டு இருந்ததாகவும் அதனை செல்போனை பறித்துச்சென்ற பெண் வாடிக்கையாளர் எடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து டிஎஸ்பி மனோஜ் குமார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விரிவான சிசிடிவி காட்சிகளை கேட்ட போது மும்பையில் உள்ள தலைமை நிறுவனம் அனுமதித்தால் மட்டுமே தர இயலும் என்று ஊழியர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இன்னும் சில சிசிடிவி கேமரா காட்சிகள் கிடைத்தால் மட்டுமே, வாடிக்கையாளராக வந்த பெண் செல்போனை மறைத்து வைத்தாரா? அல்லது ஊழியர்கள் மறைத்து வைத்த காமிரா செல்போனா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித பயன்பாட்டிலும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments