'வாக்னர்' ஆயுதக்குழு பின்வாங்கியது ஏன்.? தளபதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகத் தகவல்....
வாக்னர் ஆயுதக்குழு தளபதிகளின் குடும்ப உறுப்பினர்களை ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகள் மிரட்டியதாலேயே மாஸ்கோவை கைப்பற்றும் முயற்சியிலிருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாக பிரிட்டன் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய படைகள் தமது வாக்னர் வீரர்கள் 2 ஆயிரம் பேரை கொன்றுவிட்டதாகக் கூறி மாஸ்கோ நோக்கி படைகளுடன் முன்னேறி சென்ற வாக்னர் தளபதி பிரிகோஷின், பெலாரஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பின்வாங்கினார்.
வாக்னர் குழுவில் வெறும் 8,000 வீரர்கள் மட்டுமே இருந்ததாகவும், ரஷ்ய ராணுவத்துடன் மோதினால் படுதோல்வி அடைந்து கொல்லப்படுவோம் எனத் தெரிந்தே பிரிகோஷின் பின்வாங்கியிருக்கலாம் என உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
வாக்னர் குழு ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடப்போவது அமெரிக்க உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் கூட, புடின் தங்கள் மீது பழி போட்டுவிடுவார் எனக் கருதியே அவர்கள் மெளனம் காத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகோஷின் பெலாரஸுக்கு சென்ற நிலையில், இனி வாக்னர் குழு தளபதிகளை நீக்கி விட்டு அதன் வீரர்களை ரஷ்ய ராணுவத்தில் இணைத்துக்கொள்ள புடின் முயற்சிப்பார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments