ரஷ்யா: வாக்னர் குழு முற்றுகை.. புதினின் நேரடி மிரட்டல்.. பின்வாங்கிய பிரிகோஷின் முடிவுக்கு வந்த நாடகம்

0 2140

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென தனது முடிவை மாற்றி பின்வாங்கியுள்ளது. இதனால் 24 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பிரிகோஷின் நடத்தும் வாக்னர் ஆயுதக்குழுவுக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து யாரும் எதிர்பாராத நிலையில் வாக்னர் குழு ரஷியாவுக்கு எதிராகத் திரும்பி, ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது.

இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசவிரோதிகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என புதின் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் மூளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதினின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத பிரிகோஷின் தலைநகர் மாஸ்கோவையும் கைப்பற்றப் போவதாக அறிவித்து தனது ராணுவ அணிவகுப்பையும் நடத்தினார். 

இதையடுத்து ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசின் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்ஸ்கோ வாக்னர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சமரச முயற்சியின்படி, பிரிகோஷின் பெலாரசுக்கு செல்ல இருப்பதாகவும்,ஆயுதப்புரட்சி முடிவுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரிகோஷின் மற்றும் அவரது படையினர் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு கைவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாகவே பிரிகோஷின் தனது படைகளை பின்வாங்குவதாக அறிவித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ரோஸ்டோவ் நகரில் இருந்தும் வாக்னர் ஆயுதக் குழு பின்வாங்கியது. இதையடுத்து ரஷ்யாவில் 24 மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments