காலத்தை வென்ற கவிதையும் இசையும்.. கண்ணதாசன் 97, எம்எஸ் விஸ்வநாதன் 96

0 3101

தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர்கள் கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர்களின் பிறந்தநாளான இன்று இருவரையும் நினைவுகூரும் செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...

காதல், பாசம், தத்துவம், ஆன்மிகம் என எதை எழுதினாலும் தனி முத்திரையைப் பதித்தவர் கண்ணதாசன். அவரது எண்ணற்ற திரைப்படப் பாடல்களுக்கு இதயத்தோடு இரண்டறக் கலக்கும் வகையில் இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் வழங்கிய இசை ஆறு இன்னும் வற்றாது ஓடிக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கதை- வசனகர்த்தா, அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருந்தாலும், கண்ணதாசன் எழுதிய அற்புதமான திரைப்பாடல்கள்தான் இன்னும் உயிர்ப்போடு நிற்கின்றன.

காதலின் மகத்துவத்தை கவிதை வரிகளாக்கி அவற்றை நெஞ்சங்களில் இடம்பெறச் செய்தவர் கண்ணதாசன். காதலின் மென்மையை இசையால் மெருகேற்றியவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

எம்.எஸ்.வி.யின் மெல்லிசையால் கண்ணதாசன் பாடல்கள் வலிமை பெற்றனவா அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்.எஸ்.வி.யின் இசைக்கு இனிமை கூடியதா என வியக்காதார் இருக்க முடியாது.

பாசம், குடும்ப உறவுகள் சார்ந்த பாடல்களிலும் கண்ணதாசனுடன் எம்.எஸ்.விஸ்வநாதன் கைகோர்த்து நிகழ்த்திய மாயாஜாலங்கள் இனி எந்தக் காலத்திலும் சினிமாவில் காண முடியாத பொற்காலங்கள்.

சோகம், இழப்பு, பிரிவு, மரணம் போன்ற மானுடத் தத்துவங்களை கடைக்கோடி மக்களுக்கும் பாடல்களால் கொண்டு சேர்த்தவர்கள் கண்ணதாசன்- விஸ்வநாதன்.

ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்.எஸ்.வி.யும் வரிகளாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்...!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments