என் குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்..! விசித்திர புகாரை விசாரிக்கும் டி.எஸ்.பி

0 4299

தன் குழந்தைக்கு தந்தை யார் என்று கண்டுபிடித்து தறுமாறு பச்சிளம் பெண் குழந்தையுடன் ஏழைப்பெண் ஒருவர் கடம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பசியால் வாடிய குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுத்து , புதிய ஆடைகள் அணிவித்த மகளிர் போலீசார் , அந்தப் பெண்ணை காதலித்து ஏமாற்றிய 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

காவல் துறையின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை.... பவுடர் அடித்து... பொட்டு வைத்து... புத்தாடை அணிவித்து... கொஞ்சி மகிழும் பெண் காவலர்கள்..! யார் இந்த குழந்தை..?

ஆடைகள் ஏதும் அணிவிக்கப்படாத 2 மாத பெண் குழந்தையை கையில் ஏந்தியபடி, அபலை பெண் ஒருவர் ஏக்கத்துடன், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றார். அவருடன் அந்தப்பெண்ணின் வயதான தந்தையும் சென்றிருந்தார். பெண்ணின் வறுமை நிலையை கண்டு மனமிறங்கிய பெண் போலீசார் என்னவென்று விசாரித்த போது அந்தப்பெண் விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார்.

பிபிஏ பட்டதாரியான அந்தப்பெண் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனக்கு செல்போனில் ‘ராங் கால்’ அழைப்பு மூலம் அறிமுகமான லாரி ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரின் தொடர்ச்சியான பேச்சில் மயங்கி காதலித்ததாகவும், அவர் நெருங்கிப் பழகிப்பிரிந்த பின்னர், அவரது நண்பரை நம்பி பழகியதாகவும், அவரும் தன்னை நம்ப வைத்து கைவிட்டுச் சென்ற பின்னர், மூன்றாவதாக வேறு ஒரு இளைஞரின் ஆசை வார்த்தையை நம்பி காதலித்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மீண்டும் இசக்கி முத்துவும் , 2 வது காதலனும் நெருங்கிப்பழகிய நிலையில் அந்தப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகின்றது. தான் குழந்தை பேரு அடைந்திருப்பதாக கூறியதும் நெருங்கிப்பழகிய 3 பேரும் கைவிட்டுச் சென்று விட்டதாக புகாரில் . அந்தப் பெண்ணுக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்த நிலையில் தனது காதலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் அந்த குழந்தை தங்களுக்கு பிறக்கவில்லை என்று மறுப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வாக்குறுதியை நம்பி பழகியதற்கு தற்போது குழந்தையுடன் அவதிப்படுவதாகவும், அவமானம் தாங்காமல் தனது தாய் உயிரிழந்த நிலையில், வேலைக்கு செல்ல இயலாத தந்தை, குழந்தையின் பசியாற்றவும், மானத்தை மறைக்க ஒட்டுத்துணி வாங்க கூட வழியில்லாத அளவுக்கு வறுமை கசக்கி பிழிவதால் தனது குழந்தையின் தந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அந்தப் பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தார்.

3 பேரை காதலித்து விட்டு புகார் கொடுக்க வந்திருக்கியா ? என்று வழக்கமான வசவுகள் ஏதுமின்றி, அந்த புகாரைப் பெற்றுக் கொண்ட மணியாச்சி டி.எஸ்.பி யோகேஸ்வரன், அந்த அபலை பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார். மகளிர் போலீசார் பிஞ்சுக் குழந்தைக்கு புட்டியில் பால் கொடுத்து பசியாற்றினர். பவுடர் அடித்து, பொட்டு வைத்து புத்தாடை அணிவித்து அந்த குழந்தையை தாயுள்ளத்தோடு நன்றாக கவனித்துக் கொண்டனர்

இது ஒரு புறமிருக்க , அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இசக்கி முத்துவை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அவர் கர்ப்பத்துக்கு காரணமில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. 2 வது மற்றும் 3 வது காதலனை போலீசார் தேடினர். இதில் 3 வது காதலன் கஞ்சா வழக்கில் சிக்கி சேலம் சிறையில் சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் விசாரித்து இந்த பெண்ணின் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்த போலீசார், அந்தப் பெண்ணின் குழந்தை பராமரிப்புச்செலவுக்கு, 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, குழந்தைக்கு தேவையான ஆடைகளையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments