பேனா நினைவுச்சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி... விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு அரசு..!
வங்கக் கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இறுதி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது, ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது, மண் அரிப்பு, மணல் திரட்சி ஏற்படுவதை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கண்காணிக்க வேண்டும், திட்டம் தொடர்பான தகவல்களில் தவறு இருந்தால் திட்டம் நிராகரிக்கப்படும் என்பன உள்ளிட்டவை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள விதிமுறைகள் ஆகும்.
இந்த அனுமதியை அடுத்து நினைவுச் சின்னத்தை எழுப்புதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments