காவல் ஆணையரக வாட்ஸ் அப் குழுவில் அதிகாரிகளிடையே மோதல்.. குழுவை கலைத்து End Card போட்ட ஆணையர்
தாம்பரம் காவல் ஆணையரக வாட்ஸ் அப் குழுவில் இரு உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற கருத்து மோதலால் காவல் ஆணையர் அந்த குழுவையே கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாநகரின் பகுதி விரிவடைந்ததால் காவல்துறை கண்காணிப்பு அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தாம்பரம் காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகளை ஒருங்கிணைக்கும் விதமாக நிர்வாக வசதிக்காக ஒரு வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது. காவல் ஆய்வாளர்கள் முதல் ஆணையர் வரை உள்ள 117 பேரை கொண்டு இந்த வாட்ஸ் அப் குழு செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதில் உள்ள இணை ஆணையர் மூர்த்தி, சக அதிகாரியும் துணை ஆணையருமான ஜோஸ் தங்கய்யாவிற்கு அனுப்பவேண்டிய மெமோ காப்பியை வாட்சப் குழுவில் பகிர்ந்ததால் தாம்பரம் காவல் ஆணையரக வாட்சப் குழுவே களேபரம் ஆகியுள்ளது.
அந்த பட்டியலில் குற்றச்சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் ஜோஸ் தங்கய்யா , எப்பொழுதும் போலீஸ் ரூல்ஸ் பேசும் இணை ஆணையருக்கு வாட்சப் குழுவில் மெமோவை பகிரக்கூடாது என தெரியாதா எனக்கேட்டுள்ளார்.
இணை ஆணையரோ தாம் அனுப்பவில்லை எனவும், முகாம் எழுத்தர் தவறுதலாக அனுப்பி விட்டதாகவும், தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த குடுமிப்பிடி சண்டையால் காவல் ஆணையர் அமல்ராஜ் அந்த குழுவையே கலைப்பதாகவும் தனிப்பட்ட முறையில் தகவல்களை பரிமாறிகொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தாம்பரம் காவல் ஆணையரக அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் களேபரத்தில் உள்ளனர்.
Comments