நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வந்தவரை ஓடஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்த கும்பல்...!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வந்தவரை கும்பல் ஓடஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தது.
கடந்த மார்ச் 30 ஆம் தேதி காரைக்குடி செஞ்சை நாச்சுழியேந்தலை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மதுரை அருகே உள்ள திருமோகூரைச் சேர்ந்த வினித் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் வினித் உள்ளிட்ட 3 பேர் தினமும் காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கையெழுத்திட்டு வந்தனர்.
வழக்கம்போல கையெழுத்திட புறப்பட்டவர்களை காரில் வந்த கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியது. இதில், தடுமாறி கீழே விழுந்த வினித்தை அக்கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதற்குள், அங்கு வந்த வினித் நண்பர் ஒருவர் கையில் வாளுடன் காரில் வந்தவர்களை விரட்டியடித்தார்.
Comments