இதெல்லாம் கலெக்டருக்கு தேவையா..? நாங்க இப்போ அடிச்சிப்போம் பிறகு சேர்ந்துக்குவோம்... ஏன்னா நாங்க அரசியல்வாதிகள்...!

0 3999

ராமநாதபுரத்தில் அரசு விழாவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சரையும், எம்.பியையும் சமாதானப்படுத்தச் சென்ற மாவட்ட ஆட்சியரை அரசியல் கட்சியினர் கீழே தள்ளி விட்டனர்.

வாய்யா, போய்யா என்று அமைச்சர் மற்றும் எம்.பியின் ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ள நடுவில் மாட்டிக் கொண்டார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்றது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி விட்டு மேடையில் திராவிட இயக்கத்தின் வரலாறு குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ராமநாதபுரம் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி, நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருப்பதை பார்த்து மேடையிலிருந்த மாவட்ட ஆட்சியரை கீழே அழைத்தார். 3 மணிக்கு நிகழ்ச்சி நடப்பதாக சொல்லி விட்டு முன்னரே நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என கேள்வி எழுப்பினார்.

மேடையிலிருந்து கீழே வந்த அமைச்சர், நவாஸ் கனியைப் பார்த்து உள்ளூர் பேச்சு வழக்கப்படி வாய்யா இதெல்லாம் ஒரு பிரச்னையா, பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. பொதுவெளியில் எப்படி எம்.பியைப் பார்த்து வாய்யா என அழைக்கலாமென அவரது ஆதரவாளர்கள் எதிர் கேள்வி கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருதரப்பினருக்கும் இடையில் அப்பாவியாக சிக்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்த போது கூட்டத்தில் ஒருவர் ஆட்சியரின் மீது கை வைத்து தள்ளி விடவும், அவர் அங்கிருந்த நாற்காலியில் தடுமாறி விழுந்தார்.
மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு போலீசார் அவரை தூக்கி விட்டதோடு, மற்றவர்களையும் சமாதானப்படுத்தினர்.

3 மணிக்கு நிகழ்ச்சியை நடத்துவதாக கூறி விட்டு முன்னரே நடத்தப்பட்டது குறித்து தலைமைச் செயலரிடம் புகார் தெரிவித்திருப்பதாக தெரிவித்த நவாஸ் கனி, தனக்கும் அமைச்சருக்கும் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில், அமைச்சரும், எம்.பியும் மற்றொரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அமைச்சரும், எம்.பியும் மற்றொரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர். அதே நேரத்தில், ஆட்சியரை தள்ளி விட்டது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீஸார், எம்.பியின் உதவியாளர் விஜயராமுவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments