ஸ்காலர்ஷிப் தருவதாக ஆசைகாட்டினால் உஷார்.. மொத்த பணமும் போயிரும்..! பணத்தை இழந்து தவிக்கும் பெற்றோர்
தமிழக அரசின் பெயரை தவறாக பயன்படுத்தி ஸ்காலர்ஷிப் தருவதாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யச்சொல்லி அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் சுருட்டிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவை பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிந்த மாணவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தமிழக அரசின் கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி மாணவருக்கு 54 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி முதல் கட்டமாக வங்கி கணக்கிற்கு 24 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருப்பது போல குறுஞ்செய்தியை செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முழு தொகையையும் பெற வேண்டுமானால் தாங்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு 2 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணத்தை அனுப்பி வைக்கும்படியும் கூறி உள்ளனர். இதனை நம்பி 2 ஆயிரம் ரூபாய் அனுப்பிய மாணவர்களின் பெற்றோரின் செல்போனுக்கு கியூ ஆர் கோடு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதனை ஸ்கேன் செய்த அடுத்த நொடி அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மர்ம நபர்கள் சுருட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது குறித்து கோவை மாநகர சைபர் குற்ற பிரிவில் புகார் அளித்த நிலையில் ,இது டெல்லியில் உள்ள கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் மற்றும் வங்கி எண்களை கொண்டு விரைவாக துப்பு துலக்கியபோது இந்த மோசடி கும்பல் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு சென்று விசாரித்த போலீசார் ஸ்காலர்ஷிப் பணம் தருவதாக கூறி பணம் சுருட்டிய கும்பலை அதிரடியாக சுற்றிவளைத்தனர். அங்கிருந்த டேவிட், லாரன்ஸ் ராஜ், ஜேம்ஸ், சகாயராஜ், மாணிக்கம் உள்ளிட்டோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 வங்கிகளின் கணக்கு புத்தகங்களையும் , ஏ.டி.எம், அட்டைகளையும் ,அதில் இருந்த 7 லட்சம் ரூபாயையும் , 22 சிம்கார்டுகளையும் 44 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த மோசடிக்காக டெல்லியில் பிரத்யேக பயிற்சி பெற்ற இவர்கள் , கல்வித்துறையின் செயலியில் இருந்து மாணவர்களின் டேட்டாக்களை திருடி, அதில் உள்ள தொடர்பு எண்கள் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஸ்காலர் ஷிப் ஆசைகாட்டி பணத்தை சுருட்டி வந்ததாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்பின் அறிமுகம் இல்லாத யாராவது லிங் அனுப்பினாலோ, கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய சொன்னாலோ செய்ய வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments