தொகுதிக்கு 15 கோடி செலவு செஞ்சா எவ்வளவு சம்பாதிப்பாங்க..? மாணவர்களிடம் அரசியல் பேசிய விஜய்!

0 2318

பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று பெற்றோரிடம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் வலியுறுத்த வேண்டும் என்று பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கவுரவித்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஆயிரத்து 404 மாணவ மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து தானே கார் ஓட்டிக் கொண்டு வந்த நடிகர் விஜயை பார்க்க வழியெங்கும் ரசிகர்கள் திரண்டனர்.

ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த படி நிகழ்ச்சி நடந்த கன்வென்ஷன் மையத்துக்கு வந்தார் நடிகர் விஜய்.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடி, திருக்குறளை வாசித்து நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், கல்வியை யாராலும் பறிக்க முடியாது என்ற அசுரன் படத்தின் வசனம் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த தனக்கு தூண்டு கோலாக இருந்தது என்றார்.

மாணவர்களின் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தனது நீண்ட கால ஆசை இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறியதாக விஜய் கூறினார். உயர்கல்விக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், சமூக வலை தளங்களிலும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவர்கள் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட விஜய், நாளைய வாக்காளர்களான இன்றைய மாணவர்கள், புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.

பணம் பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடக் கூடாது என்பதை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றோரிடம் கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்படி ஓட்டுப் போடுவது நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது போன்றது என்றார் விஜய். தேர்தலில் வெற்றி பெற தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவு செய்பவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார். மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்திக்கு மேடையில் இருந்து இறங்கி வந்து பரிசு வழங்கினார். இதே போல தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பொன்னாடை போர்த்தி, காசோலை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 6 ஆயிரம் பேருக்கு பதினைந்து வகையான உணவு வகைகளுடன் சைவ விருந்து வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments