பிரியாணிக்கு பணம் கேட்பியா...? ஓட்டலை அடித்து நொறுக்கிய சில்லரை ரௌடிகள்....!
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பணம் தராததோடு, ஓசியில் சேர்வா பொட்டலம் தரவில்லையெனக் கூறி காஞ்சிபுரத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயிறு முட்ட ஓசியில் சாப்பிட்டு விட்டு ஓசியில் சேர்வா தரவில்லையெனக் கூறி மேஜை மீது ஏறி நின்று ஓட்டல் ஊழியரை தாக்கி ரகளை செய்யும் அடாவடிகள் இவர்கள் தான்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ரங்கசாமி குளம் பகுதியில் சகோதரர்களான அம்ஜித் மற்றும் உசேன் தனியார் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகின்றனர். அங்கு உணவு சாப்பிட்ட ஒரு கும்பல் பணம் தர முடியாது எனவும் தாங்கள் ரௌடிகள் எனவும் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அவர்களைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட மற்றொரு கும்பலும் பிரியாணி, சிக்கன் ப்ரைட் ரைஸ், பரோட்டா என வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தாங்கள் வசிக்கும் பகுதியின் பெயரை கூறி மிரட்டியதோடு பணம் கொடுக்கவில்லையென தெரிகிறது. அத்துடன், தங்களது நண்பர்கள் 3 பேரை வரவைத்து அவர்களையும் சாப்பிடச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த மூன்றாவது கும்பலும் பிரியாணி, சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் தர முடியாது எனவும், பணம் கேட்டால் ஓட்டலை அடித்து நொறுக்கி விடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால், என்ன செய்வதென வழிதெரியாமல் தவித்த ஓட்டல் உரிமையாளரிடம் தங்களுக்கு சேர்வா பொட்டலம் ஓசியில் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
சேர்வா பொட்டலம் தயாராக இல்லையென உரிமையாளர் கூறியதும் சூடாகிப் போன சில்லரை ரவுடிகள், நேரடியாக சமையலறைக்குள் நுழைந்து தகராறு செய்யத் துவங்கினர்.
அங்கிருந்த உணவுகளை வீசி எறிந்தும், சேர் மற்றும் தண்ணீர் டம்ளரை எடுத்து சமையல் செய்து கொண்டிருப்பவர்கள் மீது அடித்தும் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
தகராறு குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் வருவதைக் கண்ட 3 பேரில் 2 பேர் தப்பியோட ஒருவனை மட்டும் போலீஸார் பிடித்தனர். அவன் தான் அனைத்திற்கும் காரணமென கூறிய கடையின் உரிமையாளர் அவனை அடிக்க பாய்ந்த போது, போலீஸார் உரிமையாளரை கண்டித்தனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த நபரோ சாரைப் பாம்பு போல நழுவி, அந்த வழியாகச் சென்ற பேருந்தில் ஏறி தப்பிச் சென்றான்.
தாக்குதல் நடத்தியவனை தப்ப விட்ட போலீஸார் சரி, சரி நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என்று ஓட்டல் உரிமையாளரை சமாதானம் செய்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸார், பொய்யாகுளம், திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
Comments