யூடியூப்பில் வீடியோ பார்த்து சாவை தேடிச்சென்ற இளைஞர்கள்.. ஆட்கொல்லி அருவி..! தோழி கதறல்.. முகம் சிதைந்து மீட்கப்பட்ட இரு உடல்கள்..!

0 3982

யூடியூப் பார்த்து ஆளில்லா அருவிக்கு தோழியை அழைத்துச்சென்ற 3 இளைஞர்கள் , அந்த பெண்ணின் முன்பே தடாகத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட, இருவர் நீரில் மூழ்கி பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. நீரில் மூழ்கியவர்களின் முகங்கள் சிதைந்து காணப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..3

கழுகுப்பார்வையில் உற்றுப்பார்த்தால் தலை சுற்றும் வண்ணம் ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவியின் தடாகத்தில் மூழ்கித்தான் இருவர் உயிரை பறி கொடுத்துள்ளனர்..!

ஊரே உஷ்னத்தை தீர்க்க ஊட்டியைத்தேடிச்செல்ல... ஊட்டியை சேர்ந்த இளைஞர்களான நிஷாந்த் குமார், தமீம், கோவையை சேர்ந்த ஜெஸ்வின் ஆகிய 3 இளைஞர்களும் ஆளில்லா அருவியை யூடியூப்பில் தேடியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சமலை, பெரிய மங்களம் அருவி குறித்து அறிந்து கொண்ட அவர்கள் மூவரும் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 23 வயது தோழியை அழைத்துக் கொண்டு காரில் அங்கு சென்றதாக கூறப்படுகின்றது.

வெயில் காலம் என்பதால் அந்த அருவியில் தண்ணீர் கொட்டாமல் , தடாகத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. கூட்டாளிகளில் இருவர் தோழியின் முன்பு கெத்து காட்டும் விதமாக குளிப்பதற்காக தடாகத்திற்குள்ளே குதித்து உள்ளனர். சில வினாடிகளில் தடாகத்தின் ஆழம் தெரியாமல் தத்தளித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற கைகொடுத்த நிஷாந்த்குமாரும் தடாகத்திற்குள் தவறி விழுந்தார். அடுத்தடுத்து விழுந்த மூன்று பேரும் தத்தளிப்பதை கண்டு பதறிபோன அவர்களது தோழி காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த விவசாயிகள் தடாகத்திற்குள் குதித்து நிஷாந்த்குமாரை மீட்டனர். அதற்குள்ளாக இருவர் முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகின்றது

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மீட்கப்பட்ட நிஷாந்த்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர் நீருக்குள் இறங்கி தடாகத்தின் அடியில் தேடினர்.

பாறை இடுக்கில் சிக்கிக் கிடந்த தமீம் மற்றும் ஜெஸ்வின் ஆகிய இருவரது சடலங்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இருவரது சடலங்களிலும் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக விவரித்த வனத்துறையினர் தடாகத்தின் அடிப்பகுதியில் உள்ள மீன்கள் மற்றும் நண்டுகள் இவர்களின் முகத்தை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழகுப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் நிஷாந்த்குமாருக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திரில்லாக...டிரெக்கிங் செல்வதாக கூறிக் கொண்டு புதிய நீர் வீழ்ச்சிகளை நாடிச்செல்வோர் தகுந்த முன் எச்சரிக்கை இல்லாமல் நீரில் இறங்கினால் என்னமாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments