கரையைக் கடந்தது பிபர்ஜாய் புயல்.... அடியோடு சாய்ந்த மரங்கள்- மின்கம்பங்கள்..!
அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயலின் வேகத்தில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்து கிடப்பதால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுவடைந்து, கடந்த 11ந்தேத அதிதீவிர புயலாக மாறியது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே நேற்று மாலை புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.
நள்ளிரவு வரை புயல் கரையைக் கடந்தபோது, 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. வீடுகளின் கூரைகள் காற்றின் வேகத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன. நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்ததால், 1000 கிராமங்கள் இருளில் மூழ்கின.
குஜராத் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பல இடங்களில் 10 அடி உயரத்திற்கும் மேலாக கடலலைகள் எழுந்தன.
கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, 1,500 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும், 22 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புயல் கரையைக் கடந்ததும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நிவாரணப் பணிகளை உடனடியாகத் தொடங்கினர்.
முக்கிய சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
மின்விநியோகம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்துறை பணியாளர்கள் இரவோடு இரவாகப் பணிகளைத் தொடங்கி புதிய மின்கம்பங்களை நடும் பணியில்ல ஈடுபட்டுள்ளனர்.
Comments