தாயை இழந்து காசநோயுடன் பரிதவித்த குழந்தைகளுக்கு நேசக்கரம் வளர்த்து.. படிக்கவச்சி.. திருமணம்..! மதுரைக்காரய்ங்க அன்பு அள்ளுதுல்ல..!
காதல் கணவர் இறந்து விட... உறவுகளைத் தேடி டெல்லியிலிருந்து மதுரை வந்த பெண் காச நோயால் உயிரிழந்ததால் மொழி தெரியாமல் காசநோயோடு தவித்த 2 குழந்தைகளை பராமரித்து , படிக்க வைத்து ஆளாக்கிய மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள், தற்போது சீர்வரிசையுடன் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
தாயை இழந்து தவித்த 2 குழந்தைகளை அரவணைத்து வளர்த்து ஆளாக்கி பெண் குழந்தைக்கு திருமணமும் செய்து வைத்த அரசு மருத்துவர் காந்திமதிநாதன் இவர் தான்..!
காதல் திருமணம் செய்த கணவன் திடீரென இறந்ததை அடுத்து, திக்கு திசை தெரியாமல் டெல்லியில் இருந்து சொந்த ஊரான மதுரைக்கு திரும்பினார் ரொஸ்பெக் என்ற இளம் பெண். 8 ஆண்டுகளுக்கு முன் 14 வயது மகள் ரீட்டா, 9 வயது மகன் அலெக்ஸ் ஆகியோரை கையில் பிடித்துக் கொண்டு மதுரை ரயில் நிலையம் வந்து இறங்கிய உடன் நிலை குலைந்து விழுந்து படுக்கையானார் ரொஸ்பெக்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த அவரது குழந்தைகள் ரீட்டா, அலெக்ஸ் இருவருக்கும் சுத்தமாக தமிழ்
தெரியாது. படாதபாடுபட்டு ரொஸ்பெக்கை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மற்றவர்கள் உதவியுடன் சேர்த்தனர் குழந்தைகள் இருவரும். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரொஸ்பெக்குக்கு தீவிரமான காசநோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காசநோய்க்கு பிரத்யேக சிகிச்சையளிக்கும் தோப்பூர் நுரையீரல் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தாயாருக்கு சிகிச்சையளித்த வளாகத்திலேயே குழந்தைகள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிது நாட்களிலேயே ரொஸ்பெக் காச நோய்க்கு பலியானார். ஆதரவற்ற நிலைக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் உறைவிட மருத்துவ அலுவலர் காந்திமதிநாதன்.
குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர்களும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அவர்களை மருத்துமவனையில் 8 மாதங்கள் தங்க வைத்து சிகிச்சை அளித்து குணப்படுத்தினார் காந்திமதிநாதன்.
இந்த காலகட்டத்தில் நோயாளிகளுடனும் மருத்துவர்களுடனும் பேசிப் பழகி நன்றாக தமிழ் கற்றுக் கொண்டனர் குழந்தைகள். தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையே அவர்களின் வீடுபோல் மாறியது. அவர்களை அரசு விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தார் மருத்துவர் காந்திமதி நாதன்.
ரீட்டா 18வது வயதை எட்டிய போது விடுதியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே வந்து விட்டார். அவருக்கு கை கொடுத்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி காசநோயாளிகளுக்கு உதவும் தற்காலிக பணியாளராக நியமித்து மருத்துவமனையிலே தங்கி பணிபுரிய ஏற்பாடு செய்து கொடுத்தனர். தம்பி அலெக்ஸ் அக்காவுடன் தங்கியிருந்து ஐடிஐ படித்து வருகிறார்.
சில ஆண்டுகளில் திருமண வயதை எட்டிய ரீட்டாவுக்காக மருத்துமனை மருத்துவர்கள், பணியாளர்களே வரன் தேடி தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஜோசப் என்ற இளைஞரை நிச்சயதார்த்தம் செய்தனர். இருவருக்கும் புதன்கிழமையன்று கிறிஸ்தவ முறைப்படி காந்திமதிநாதன் முன்னின்று திருமணமும் செய்து வைத்தார்.
மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து ரீட்டாவிற்காக வீடு கட்டுவதற்காக ஒன்றரை சென்ட் இடம், 6 பவுன் நகை, கட்டில், பீரோவையும் தங்களின் அன்பு சீர்வரிசையாக கொடுத்து மணமக்களை திக்குமுக்காட செய்தனர்.
உதவி செய்வதற்கு உறவு தேவையில்லை... நல்ல உள்ளம் இருந்தால் போதும் என்பதை மருத்துவர் காந்திமதி நாதனும் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் நிருபித்து உள்ளனர்.
Comments