ஐயய்யோ.. ஐ டெல் போன் பாக்கெட்டில் வெடித்து ஆபீசர் உடல் கருகியது..! இரவு முழுவதும் சார்ஜ் போட்டா டமால் தான்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரியில் முதல்வர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் பாக்கெட்டில் இருந்த ஐ டெல் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதில், அவரது சட்டையில் தீப்பிடித்து உடல் கருகிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால், நெஞ்சுப்பகுதி கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் அரசு அதிகாரி இசக்கியப்பன் இவர் தான்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் இசக்கி யப்பன் சம்பவத்தன்று ஆறுமுகநேரியிலுள்ள தனது உறவினர் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் தீடிரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது
இதனால் அவரது சட்டையில் பற்றிக் கொண்ட தீயை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது சட்டையில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். அதற்குள்ளாக அவருக்கு இடது மார்பு, முகம் மற்றும் தாடை பகுதி வரை தீயில் கருகியது
அலறிதுடித்த அவரை மீட்டு உறவினர்கள் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடித்து சிதறிய போன் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்றும் இரவு முழுவதும் சார்ஜ் போட்டு விட்டு , அந்த செல்போனை பாக்கெட்டில் எடுத்து வைத்து வேலைக்கு புறப்பட்ட வழியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவரது பாக்கெட்டில் வெடித்த ஐ டெல் ஸ்மார்ட் போன் ஒரு இந்திய நிறுவன தயாரிப்பு என்று சொல்லப்பட்டாலும், இவற்றில் உள்ள பாகங்கள் அனைத்தும் சைனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டவை என்று கூறப்படுகின்றது.
எந்த ஒரு செல்போனாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் போட வேண்டும், சார்ஜ் முழுமையானதும் அதனை இணைப்பில் இருந்து எடுத்து விட வேண்டும், அதை விடுத்து இரவு முழுக்க சார்ஜ் போட்டு விட்டு பயன்படுத்தப்படும் செல்போன்களின் லித்தியம் அயன் பேட்டரி விரைவிலேயே பழுதாகும் என்று சுட்டிக்காட்டும் செல்போன் பழுது நீக்கும் வல்லுனர்கள், நாளடைவில் மெல்ல உப்ப தொடங்கும் பேட்டரியை கவனிக்க தவறினால் இது போன்ற விபரீதங்கள் நிகழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கேரள மாநிலத்தில் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தவரின் சட்டை பையில் இருந்து செல்போன் வெடித்துச்சிதறியது குறிப்பிடதக்கது
Comments