ஒற்றை தேங்காயால் மழையை நிறுத்திய திமுக நிர்வாகி..! அது எப்படி திமிங்கலம் உங்களால் மட்டும் முடியுது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கபடி போட்டியில் மழை குறுக்கிட்டதால், மழை நிற்க வேண்டி ஒற்றைத் தேங்காயை திமுக நிர்வாகி வீசினார். அதன் பின்னர் மழை பெய்யாததால் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என திரைப்படத்தில் வரும் வசனம் போல சிவகங்கையில் மழை நிற்க வேண்டி ஒத்தை தேங்காயை சாமியை கும்பிட்டு, ஸ்டாலின் பேனருக்கு வெளியே வீசி திமுக நிர்வாகி ஒருவர் மழையை நிறுத்தி விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.
சிங்கம்புணரியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில் இந்த விநோதத்தை திமுகவினர் அரங்கேற்றினர்.
பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட மின்னொலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து 18 அணிகள் பங்கேற்றன.
இரண்டு நாள் கொண்ட போட்டியின் முதல் நாள் போட்டிகள் சனிக்கிழமை நடத்தி முடிக்கப்பட்டது. 2 ஆவது நாள் போட்டியின் போது மழை பெய்ததால் அட்டவணைப்படி போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை. இதனால், 3 வது நாளுக்கு போட்டி தள்ளி வைக்கப்படுவதாகவும், அன்றும் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
3வது நாளில் போட்டி துவங்கிய போதே மழையும் தூறியது. என்ன செய்வதென யோசித்த திமுகவினர், நிலத்தடி நீரோட்டம் பார்க்கும் கட்சியின் நிர்வாகி மகேந்திரனிடம் ஐடியா கேட்டனர்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது மழை வருவதை தடுக்க ஒரு தேங்காயை எடுத்து வருண பகவானை வேண்டி கூரையில் போட்டு விட்டால் அன்று மழை பெய்யாது என்பது அப்பகுதியில் பரவலாக நம்பப்படும் ஒரு நம்பிக்கை. இதனை கழக உடன்பிறப்புகளிடம் மகேந்திரன் சொல்ல அவர்களும் ஆஹா பிரமாதமான ஐடியா என சொல்லி அதனை செயல்படுத்த கூறினர்.
அவரும் பய பக்தியுடன் மேடைக்கு ஏறி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படம் போட்ட பேனரை பார்த்து ஒரு கும்பிடு, எதிர் திசையில் ஒரு கும்பிடு என போட்டு விட்டு தேங்காயை பேனருக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டு, நிகழ்ச்சியை இனி நடத்தலாம் என உத்தரவாதம் கொடுத்தார்.
உடனடியாக நம்பிக்கையுடன் கழகத்தினர் களத்தை சரி செய்து அமைச்சர் பெரியகருப்பனை வரவழைத்து போட்டிகளையும் விறு விறுப்பாக நடத்தி முடித்தனர் திமுகவினர்.
Comments