அண்ணாமலைக்கு கண்டனம்.... கொந்தளித்த அ.தி.மு.க.வினர்.... மா.செ. கூட்டத்தில் தீர்மானம்...!

0 2114

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்திருந்த பேட்டியில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த பல நிர்வாகங்கள் ஊழல் மிக்கவையாகவும், முன்னாள் முதலமைச்சர்கள் தண்டனை பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். நாட்டிலேயே தமிழ்நாடு ஊழலில் முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த அண்ணாமலை, மக்கள் பணத்தை சுருட்டும் எந்த அரசாக இருந்தாலும் தமது கட்சி கேள்வி எழுப்பும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முன்னிட்டு அ.தி.மு.க அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள், அண்ணாமலை கொடுத்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அண்ணாமலை தி.மு.க.வின் பி அணியாக செயல்படுகிறாரோ என நீண்டகாலமாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார். ஜெயலலிதாவைப் பற்றி பேச அண்ணாமலைக்கு அறுகதை கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அ.தி.மு.க.வை பிடிக்கவில்லை என்றால் கூட்டணி இருந்து விலகிக் கொள்ளலாம் என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய போது, தமிழக பா.ஜ.க.வுக்கு நிரந்தரமான தலைவர் என்று யாரும் இல்லை என்றார். பா.ஜ.க. தேசிய தலைமை நினைத்தால் யாரையும் பொம்மை போல மாற்றிவைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார், ஜெயலலிதாவைப் பற்றி விமர்சனம் தொடர்ந்தால் தகுந்த பதிலடி தரப்படும் என்று கூறினார். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிப்பது அ.தி.மு.க. தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை முதிர்ச்சியற்று பேசி இருப்பதாக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது என்று தெரிவித்தார்.

திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை அண்ணாமலை பேட்டியாக அளித்துள்ளதாகவும் 1998 ஆம் ஆண்டில் மத்தியில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாஜகவினர் 4 பேர் எம்.எல்.ஏவாக வருவதற்கும் அதிமுக தான் காரணம் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பற்றி பேட்டியளித்த பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், அண்ணாமலையின் வளர்ச்சியை பொறுக்காமல் காழ்ப்புணர்ச்சியுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பேசி வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக, கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது பா.ஜ.க. மேலிடம் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments