மீண்டும் ரெய்டு.. அரசு பங்களாவிலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் திவீர சோதனை..!

0 4325

சென்னை மற்றும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்திலும் அமைச்சரின் அறையில் ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்...

சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வரும் அரசு பங்களாவில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலையில் அதிகாரிகள் வந்த போது நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த செந்தில் பாலாஜி, சோதனை பற்றி தகவல் அறிந்து அவசரமாக வீடு திரும்பினார். அப்போது பேட்டியளித்த அவர், சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டால் அது குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக ஸ்டேட் பேங்க் அதிகாரிகளை சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக செந்தில் பாலாஜி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய அதி விரைவுப் படையினர் வரவழைக்கப்பட்டனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கி அதிகாரிகளுடன் அங்கு சென்ற அமலாக்கத்துறையினர் ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 3 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்தனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன் அசோக்கின் வீட்டில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராயனூரில் அமைச்சரின் உறவினரான கொங்கு மெஸ் சுப்ரமணி, வெங்கமேட்டில் உள்ள நண்பர் சண்முகம் ஆகியோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

10 நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அடிப்படையிலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments