சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை மற்றும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வரும் அரசு பங்களாவில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்துகின்றனர்.
அதிகாரிகள் வந்த போது நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சோதனை பற்றி தகவல் அறிந்து வீடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டால் அது குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக ஸ்டேட் பேங்க் அதிகாரிகளை சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். அவர்கள் வீட்டு வாயிலில் காத்திருப்பதாகவும், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்ததும் வீட்டுக்குள் சென்று அவர்கள் சோதனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராயனூரில் அமைச்சரின் உறவினரான கொங்கு மெஸ் சுப்ரமணி, வெங்கமேட்டில் உள்ள நண்பர் சண்முகம் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர். வேலாயுதம்பாளையத்தில் அமைச்சரின் உதவியாளர் கார்த்திக் என்பவர் வீட்டிலும், அசோக் குமாரின் மாமனார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
10 நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அடிப்படையிலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
Comments