போலீசில் ஒரு நிஜ சிங்கம்...! கடத்தப்பட்ட போலீஸ் ஜீப்பை விரட்டிப் பிடித்த டி.எஸ்.பி..! பரபர சேசிங் காட்சிகள்
ஆந்திராவில் இருந்து போலீஸ் ரோந்து ஜீப்பை களவாடி கடத்தி வந்த இளைஞரை வந்தவாசி டி.எஸ்.பி சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் நகர காவல் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலிஸ் ரோந்து வாகனமான பொலிரோ ஜீப்பை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக வாக்கி டாக்கியில் தகவல்கள் பறந்தது. அந்த இளைஞர் போலீஸ் ஜீப்பை கடத்திக் கொண்டு தமிழகத்தின் வேலூர் வழியாக கடத்தி செல்வது அதில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் தெரியவந்தது.
இதுகுறித்து ஆந்திரா மாநில போலீசார் தமிழ்நாட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் வந்தவாசி போலீசாரும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திர போலீஸ் ஜீப் ஒன்று மக்கள் நெருக்கம் மிக்க வந்தவாசி பஜாருக்குள் நுழைந்தது....
போலீஸ் ஜீப்பை தனது பொலிரோ வாகனத்தில் விரட்டிச்சென்றார் வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக்....
ஆந்திரா ஜீப் வேகம் குறைந்ததும், தனது வாகனத்தில் இருந்து இறங்கி சிங்கம் சூர்யா போல அந்த ஜீப்பை துரத்த ஆரம்பித்தார் டி.எஸ்.பி கார்த்திக்
இதையடுத்து அந்த ஜீப் வேகமெடுத்தாலும் விடாமல் அதனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த டி.எஸ்.பி கார்த்திக், அதை ஓட்டி வந்தவனையும் தப்பவிடாமல் மடக்கினார்.
ஆந்திரா போலீசாருக்கு அல்வா கொடுத்து ஜீப்புடன் தப்பி வந்த அந்த இளைஞரை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த இளைஞர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும், நெய்வேலியை பூர்வீகமாக கொண்ட அவன், சித்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும், சொந்த ஊருக்கு வருவதற்காக போலீஸ் ஜீப்பை தூக்கி வந்ததும் தெரியவந்தது.
சூர்யாவை கைது செய்த வந்தவாசி போலீசார், ஆந்திரா போலீஸ் ஜீப்பை பறிமுதல் செய்து ஆந்திரா மாநிலம் சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சித்தூர் டிஎஸ்பி சீனிவாசமூர்த்தி மற்றும் 15 பேர் கொண்ட போலீசார் நான்கு வாகனங்களில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு வந்தனர்.
கைது செய்யப்பட்ட சூர்யாவையும், போலீஸ் ஜீப்பும் சித்தூர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவாசி போலீசாரை பாராட்டிய ஆந்திர மாநில போலீசார், சூர்யாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆந்திராவில் பதுங்கும் தமிழக குற்றவாளிகளை கைது செய்வதற்கு ஆந்திர போலீஸ் ஒத்துழைப்பதில்லை என்ற நிலையில், தமிழக போலீசார் தங்கள் கடமையை திறம்பட செய்தது பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments