சென்னையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பற்றி எறிந்த தீ..!
சென்னை கே.கே. நகரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்ததில் ஏராளமான வாகனங்கள் நெருப்பில் கருகி சேதமடைந்தன.
முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் காலி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளிலும், விபத்துகளிலும் சிக்கி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு இந்த மைதானத்தில் உள்ள வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
தகவலறிந்த அசோக் நகர், கேகே நகர் பகுதி தீயணைப்பு நிலைய வாகனங்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும், இந்த தீ விபத்தில் 5 ஆட்டோக்கள், 2 பேருந்துகள், ஒரு லாரி, ஒரு கார் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
Comments