கொடைக்கானல் சாலையில் சரக்கு போட்ட ஓட்டுநரால் சறுக்கிய ஸ்கார்பியோ.... 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது...!
கொடைக்கானல் சாலையில் மது போதையில் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்ற குடிகார மெக்கானிக் ஒருவர், அதிவேகத்தால் காருடன் 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. போதையில் வாகனம் ஓட்டிய தப்புக்கு , தண்டனையாக 3 மணி நேரம் ஸ்டியரிங்கிற்குள் கால் சிக்கி உயிருக்கு போராடிய சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...
குளிருக்கு இதமாக ஒரு பெக் சாப்பிடுவோம் என்று ஆரம்பித்து மூக்குமுட்ட குடித்து விட்டு கொடைக்கானல் சாலையில் ஸ்கார்பியோவுடன் 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த குடிகார மெக்கானிக் ராஜேந்திரனை மீட்க போராடும் காட்சிகள் தான் இவை..!
கொடைக்கானல் கான்வென்ட் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவர் கொடைக்கானல் ஏரிச்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தில் தனது நண்பரான கல்லுக்குழி விமல் என்பவருடன் மது அருந்தி விட்டு மித மிஞ்சிய போதையில் இருவரும் ஸ்கார்பியோ காரில் ஏறி புறப்பட்டுள்ளனர்.
இறக்கமான சாலை வளைவில் வாகனத்தை திருப்ப இயலாமல் தடுமாறியதால், சறுக்கிச்சென்ற ஸ்கார்பியோ கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. போதையில் வாகனம் ஓட்டிய ராஜேந்திரனின் கால் கவிழ்ந்து கிடந்த ஸ்கார்பியோவின் ஸ்டியரிங்கிற்குள் சிக்கிக் கொண்டது. லேசான காயங்களுடன் தப்பிய விமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர் , பொதுமக்கள் உதவியுடன் அந்த காரை கயிறு கட்டி நிமிர்த்தி ராஜேந்திரனை மீட்க முயன்றனர்
அந்த காரில் 6 இடங்களில் கயிறு கட்டி அதனை நிமிர்த்த மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் கை கொடுக்கவில்லை. கையில் மதுக்கோப்பையை தொட்ட தப்புக்கு தண்டனையாக ஸ்டியரிங்கிற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர இயலாமல் ராஜேந்திரன் கடுமையாக வலியுடன் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்
ஏற்கனவே மேலே இருந்து பள்ளத்திற்குள் பாய்ந்ததால் உடைந்து நொறுங்கி காணப்பட்ட ஸ்கார்பியோவை கடப்பாறை கம்பி கொண்டு நெம்பி உடைத்த மீட்புக்குழுவினர், காருக்குள் சிக்கி இருந்த ராஜேந்திரனை 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காப்பாற்றி மேலே தூக்கிச்சென்றனர்
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீண்ட நேரம் கால் சிக்கி இருந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலையில் ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகின்றார். கொடைக்கானல் போன்ற மலைபகுதி சாலைகளில் நிதானமாக கார் ஓட்டிச்சென்றாலே கவனம் சிதறினால் சில நேரம் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் சூழலில் , வளைவுகள் நிறைந்த மலைச்சாலைகளில் மூக்க முட்ட மது குடித்து விட்டு கார் ஓட்டியதால், உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து உண்டாகும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்
Comments