எடும்மா 50 ரூபாய்.. முதியோர்களிடம் அதிகார பிச்சை எடுக்கும் வங்கி காசாளர்..! வீடியோ எடுத்ததால் அம்பலம்

0 10553

சேலத்தில், முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு வரும் வயோதிகர்களிடம் கனரா வங்கி பெண் காசாளர் ஒருவர் கறாராக 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் வீடியோவால் அம்பலமாகி உள்ளது.

OAP என சுருங்க அழைக்கப்படும் முதியோர் உதவித்தொகையைப் பெற சேலம் சத்திரம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கிளையில், சேலம் நான்கு ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வயதான ஆண்களும், பெண்களும், வெள்ளியன்று குவிந்திருந்தனர். இரு மாதங்களாக அவர்களின் வங்கிக் கணக்கில், முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படாததால் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை கண்ட இளைஞர் நாகராஜன் என்பவர் அங்கு நடக்கின்ற காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தாமதமாக வந்த அந்த வங்கி காசாளர் உஷா, முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படும் வங்கி கணக்குப் புத்தகத்தை வாங்கி வரவு வைக்க தொடங்கியதும் அனைவரிடமும்,  50 ரூபாய் கறாராக கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 20 ரூபாய் கொடுத்த மூதாட்டியிடம், எஞ்சிய 30 ரூபாய் எங்கே எனக் கேள்வி எழுப்பி, உங்க முகத்தை நான் மறக்க மாட்டேன் என அவர் கூறிய காட்சிகள், வீடியோவில் பதிவாகியுள்ளது. 

கைரேகை எடுத்துக்கொள்ளாதவர்கள் ஒருபுறமாக வாங்க எனக்கூறும் அந்த பெண் காசாளர், பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துக் கொண்டும், அவர்களிடம் விசாரித்துக் கொண்டும், பணியாற்றினாலும்,50 ரூபாயை பெற்றுக்கொள்வதில், கண்ணும் கருத்துமாக இருந்தார்....

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நாகராஜ் கூறும் போது, அந்த வங்கி காசாளர் முதியோர் பணம் பெற வந்தவர்களிடம் மிகவும் கெடுபிடியாக லஞ்சம் வாங்கியதாக ஆதங்கம் தெரிவித்தார்.

வயதான காலத்தில், குடும்பத்தினரின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் நடத்தப்படும் பெரியவர்களும், வயதான பெண்களும், ஆதரவின்றி தவிப்பவர்களும், குறைந்தபட்ச தொகையை பெறுவதற்கு கூட லஞ்சம் தரும் சூழல், முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments