யம்மி ஓட்டலா வேண்டாம்ப்பா..! பூரான் பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்..! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கம்
கடலூரில் உள்ள யம்மி செட்டி நாடு ஓட்டலில் வாங்கிய பிரியாணிக்குள் கிடந்த பூரானை சாப்பிட்டு விட்டதாக கூறி தந்தை ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தட்டில் இருந்த பூரான் பிரியாணியுடன் மருத்துவமனைக்கு குடும்பமே வந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கடலூர் யம்மி ஓட்டலில் பிரியாணி வாங்கிய பார்சலில் பூராண் இருந்ததாக புகார் தெரிவித்து பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த காண்டிராக்டர் குடும்பத்தினர் இவர்கள் தான்..!
கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரச் சேர்ந்தவர் ராஜா. கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள்களும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விடுமுறையில் உள்ள குழந்தைகள் தங்கள் தந்தையிடம் ஆசையாக பிரியாணி கேட்டுள்ளனர். இதை அடுத்து ராஜா சனிக்கிழமை மதியம் கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள யம்மி (YUMMY) என்ற ஓட்டலில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.
ஒரு பிரியாணி பார்சலை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மற்றொரு பிரியாணி பார்சலை பிரித்து மகனுக்கும் இவரே ஊட்டியதாக தெரிவித்த ராஜா, மகனுக்கு உணவை வாயில் வைக்கும் பொழுது அதில் வெந்து போன பூரான் இருந்ததாகவும் , அதில் பாதிப்பூரானை குழந்தை அஜய் கிருஷ்ணா விழுங்கிய நிலையில் மீதி பூரானை தட்டில் துப்பி விட்டான் என்றார்.
இதை அடுத்து உடனடியாக அசைவ ஓட்டலுக்கு சென்று தகவல் கொடுத்துவிட்டு பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் தன் குழந்தையை கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்ததாக ராஜா தெரிவித்தார்.
சிறுவனுக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் பிரியாணியுடன் பூரானை சாப்பிட்டதாக கூறப்படும் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பூரான் பிரியாணி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கம் கலையாமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த யம்மி ஓட்டல் நிர்வாகத்தினர் தெரியாமல் நடந்துவிட்டது , எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்றும் வீட்டில் நடந்துள்ளது, நாங்கள் கஷ்டப்படுறோம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக் கொண்டனர்.
Comments