மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை... ஆளுநர் தலைமையில் அமைதிக் குழுவை அமைத்தது மத்திய அரசு
மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ள நிலையில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
மணிப்பூரில் மெய்தேய் மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று நேரில் பார்வையிட்டதையடுத்து நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினர் போல வேடமணிந்து சென்ற ஒரு தரப்பினர், எதிர்க்குழுவைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்க எதிர்க்குழுவினர் முயற்சிப்பார்கள் என்பதால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அம்மாநில ஆளுநர் தலைமையில், முதலமைச்சர், பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய அமைதிக் குழுவை அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments