திட்டமிட்டபடி மேட்டூர் அணை 12-ஆம் தேதி திறக்கப்படும் - முதலமைச்சர் உறுதி
காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் 96 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதால் மேட்டூர் அணை திட்டமிட்டப்படி வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாயர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் கர்நாடகா அணைக் கட்டுவதை தடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார்.
முன்னதாக, தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும் விண்ணமங்கலத்தில் உள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள கூழையாறு வடிகால், இருதயபுரம் மற்றும் வெள்ளனூரில் நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட இடங்களில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை முதலமைச்சர் பார்த்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வுக்கு இடையே முதலமைச்சர் ஆங்காங்கே பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்தார். திருச்சி மாவட்டம் செங்கரையூர் கிராமத்தில் முதலமைச்சரிடம் தங்கள் கிராமத்துக்குப் பேருந்து வசதியில்லை என பெண்கள் முறையிட்டனர்.
இந்த ஆய்வுகளின் போது அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Comments