56 மணி நேர போராட்டம்... சடலக் குவியலில் இருந்து உயிரோடு வந்த தொழிலாளி..!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர், 56 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
எதிர்பாராத விபத்து... தூக்கி வீசப்பட்ட சடலங்கள்... சிதைந்து கிடந்த உடல் பாகங்கள்... தண்டவாளங்களில் ரத்தக்கறை... இப்படி பல குடும்பங்களின் நம்பிக்கை, கனவுகளை சிதைத்து.. பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது, கோரமண்டல் ரயிலின் கோர விபத்து...
நாட்டையே உலுக்கிய இந்த ஒடிசா ரெயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சிதைந்த உடல்கள் பாலசோரில் உள்ள பள்ளிக்கூட அறைகளில் வைக்கப்பட்டன.
சடலங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒருவர் நுழைந்தபோது, அவரது கால்களை இரு கைகள் இறுக்கிப் பற்றிக் கொண்டன. மிரண்டுபோன அந்த நபர் உற்று கவனித்தபோது தான் தெரிந்தது, சடலம் என நினைத்து தூக்கிப்போடப்பட்டிருந்த இளைஞர் உயிருடன் இருக்கிறார் என்பது. இரு கால்களையும் இழந்துவிட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபர், நான் உயிருடன் இருக்கிறேன்...கொஞ்சம் தண்ணீர் கொடுங்க என்று முனகியுள்ளார்.
உடனே அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த நபரின் பெயர் ராபின் நையா. மேற்கு வங்கத்தில் மாநிலம் சர்நேகாலி கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராபின், வேலைதேடி முன்பதிவில்லா பெட்டில் ஏறி இந்த ரயிலில் பயணித்த போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
Comments