காட்டுத் தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமா? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்
கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காற்று அபாயகரமான அளவை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக காற்றுமாசு உள்ள நகரங்கள் என்ற பட்டியலில் டெல்லியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது நியூயார்க் நகரம்...
கனடாவில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பற்றிய காட்டுத் தீயால் 94 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பாதிப்புஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்பெர்ட்டா, நோவா ஸ்கோடியா, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒண்டாரியோ உள்ளிட்ட மாகாணங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
கனடாவில் பரவிய காட்டுத் தீ, அண்டை நாடான அமெரிக்காவையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அங்கிருந்து வரும் புகைமூட்டம் அமெரிக்காவின் 13 மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலடெல்பியா, பால்டிமோர், வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்தவாறே வெளியில் செல்கின்றனர். நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர தேவியின் சிலை கண்களுக்குத் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை ஆரோக்கியமற்ற நிலையில் இருந்த காற்றின் தரம், அதன்பின்னர் அபாயகரமான நிலைக்கு காற்று சென்றுவிட்டதாக தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.
தற்போது காற்றின் தரம் PM2.5 என்ற அளவில் இருப்பதால் சுவாசக்குழாய் பாதிப்பு, நுரையீரல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் பக்கவிளைவுகளை அனுபவித்து வருவதாகவும், இது பருவநிலை மாற்றத்தின் அப்பட்டமான நினைவூட்டல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ காரணமாக எழுந்துள்ள புகை மற்றும் மோசமான காற்றின் தரம் போன்ற காரணிகளால் 10 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. நியூயார்க் மற்றும் பிலடெல்பியா போன்ற விமானநிலையங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கனடா காட்டுத் தீயை கட்டுப்படுத்த வந்திருக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்க தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலநிலை மாற்றத்தையும், அதன் தாக்கங்களைச் சமாளிப்பதற்கு உலகில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் என்பதை கட்டுக்குள் வைத்திருக்காத வரை இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகளையும், பேரிழப்புகளையும் நாம் சந்தித்தே தீர வேண்டும்.
Comments