புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லட்சக்கணக்கான ரூபாய் நிவாரணத்தொகையை பெறும் நோக்கில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை தனது கணவனின் சடலம் என்று ஏமாற்றி வாங்கிச்செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது..
ஒடிசாவின் பாஹனக பசார் ரெயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்து உயிரிழந்த 40க்கும் மேற்பட்டோரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களது சடலங்களை புகைப்படம் எடுத்து அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரெயில்வே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது, பிரதமர் நல நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், ஒடிசா மாநில அரசு 5 லட்சம் ரூபாயும், நிவாரணமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் மணியபண்டா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்பவர் தனது கணவர் பிஜய் தத்தா கடந்த 2 ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறியதோடு, அங்கு அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்து இது தனது கணவரின் சடலம் என்று அடையாளம் காட்டினார்.
அந்த சடலத்தின் முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் தெரியாத வகையில் இருந்த நிலையில் இதனை கீதாஞ்சலி எப்படி அடையாளம் காட்டினார் ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்ததால், கணவர் தொடர்புடைய ஆவணங்களை கொண்டு வர கூறிய போது அவர் பொய் சொல்லி இருப்பது அம்பலமானது. விசாரணையில் கடந்த 13 வருடங்களாக கணவர் பிஜய் தத்தாவை பிரிந்து வாழும் கீதாஞ்சலி மத்திய ,மாநில அரசுகள் அறிவித்துள்ள லட்சக்கணக்கான ரூபாய் நிவாரணத்தை பெறுவதற்காக அடையாளம் தெரியாத வேறு ஒருவரின் சடலத்தை பெற்று அடக்கம் செய்ய முயன்றது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
இதற்க்கிடையே தன்னை ரெயில் விபத்தில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மனைவி கீதாஞ்சலி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கணவர் பிஜய் தத்தா, மணியபண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் முற்றிலும் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து போன உடல்களுக்கு உரிமைகோரினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தி உரியவர்களிடம் சடலத்தை ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
Comments