நீ தான் ரோட்டுல உட்காருவியா.. நாங்கள் துண்ட விரிச்சு படுப்போம் கள்ள மது விற்போர் அட்ராசிட்டி..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தோர் அவருக்கு போட்டியாக சாலையில் படுத்து உறங்கி, போராட்டம் செய்த கூத்து அரங்கேறி உள்ளது..
நட்ட நடு சாலையில் ஆற்றாமையுடன் அமர்ந்து கோஷமிட்டுக் கொண்டிருப்பவர் கள்ள மது விற்பனைக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்....
அவர் யாரை குற்றம்சாட்டுகிறாரோ, அவர்களே, அவருக்கு அருகில் துண்டை விறித்துப் படுத்து... போட்டிப் போராட்டம் நடத்திய காட்சிகள் தான் இவை..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 11 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இந்த மதுபான கடைகளுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மதுபான பார்களும் இயங்கி வருகின்றன. சில மதுபான பார்களில், 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் கனகராஜ் என்பவர், போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதையறிந்த பார் உரிமையாளர் முருகேசன், போலீசுக்கு தகவல் அளித்த கனராஜை, அவரது கடைக்கு ஆதரவாளர்களுடன் சென்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
புகார் அளித்த தன்னை உள்ளூர் அரசியல் பிரமுகர் தூண்டுதலின் பேரில் தாக்க முயற்சிப்பதாக கூறி நட்ட நடு சாலையில் தனி ஒருவனாக அமர்ந்து கனகராஜ் நீதி கோரினார்....
அப்போது,அவரை தாக்க வந்த பாரின் ஊழியர்கள் 2 பேர், தங்கள் பங்கிற்கு, கனகராஜ் அருகிலேயே துண்டை சாலையில் விரித்து, உருண்டு, புரண்டு, படுத்துறங்கி, போட்டி போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
விரைந்து வந்த குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணி, புகார் அளித்தவரையும், புகாருக்குள்ளானவர்களையும், அப்புறப்படுத்தியதோடு, தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல், சாலை மறியல் செய்வது சரியல்ல என கடிந்து கொண்டார்...
Comments