மதுபோதையில் அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாக்கியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
கர்நாடக மாநிலத்தில் அரசுப்பேருந்தை மதுபோதையில் ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாக்கியவருக்கு பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.
அம்மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் உள்ள அவுராத் நகரில் தனியார் ஆலை ஊழியரான சூரியவம்சி, மதுபோதையில் பேருந்து நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. தனது சொந்த ஊருக்கு செல்லும் பேருந்தை தவறவிட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்தை எடுத்துக்கொண்டு சூரியவம்சி புறப்பட்டதாக தெரிகிறது. சிறிது தூரத்திலேயே சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் அவர் பேருந்தை மோதினார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பேருந்துக்குள் ஏறி சூரியவம்சியை அடித்து கீழே இறக்கினர்.
பின்னர் சூரியவம்சி போலீசிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டார். பேருந்து மெதுவாக சென்றதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Comments