ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்தவர் வீடு நள்ளிரவில் முற்றுகை.. முகவரின் சகோதரரை மரத்தில் கட்டி வைப்பு..!
நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் யோகானந்தம். அவரது வீட்டை நேற்றிரவு 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
அவர்கள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் கதவு கண்ணாடி, மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. முகவர் யோகானந்தத்தின் சகோதரர் சதிஷ் குமார் என்பவரையும் சிலர் மரத்தில் கட்டிப்போட்டனர்.
இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் டி.எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக் அங்கு திரண்டு இருந்தவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, நெமிலி ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் ஒரு லட்ச ரூபாய் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தரப்படும் என்ற அறிவிப்பை நம்பி தாங்கள் பணம் முதலீடு செய்து ஏமாந்ததாக திரண்டு இருந்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மோசடி புகாரில் நிறுவனம் மூடி சீல்வைக்கப்பட்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கேட்டு முகவரின் வீட்டை முற்றுகையிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. அளித்த உறுதி மொழியின் பேரில் சதீஷ் குமாரை விடுவித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments